Wednesday, June 19, 2019
சென்னையில் திறக்கப் பட்ட திருநங்கைகளுக்கான மருத்துவப் பிரிவு தமிழகமெங்கும் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலும் திறக்கப்பட வேண்டும். திருநங்கைகள் கோரிக்கை.
ம.மு.கண்ணன்.
மருத்துவத்துறையில் இதுவரை ஆண்கள், பெண்கள் என்று இருந்தபோதிலும் திருநங்கைகளுக்கென்று தனிப்பிரிவோ சிறப்பு மருத்துவர்களோ இதுவரை இல்லாமலிருந்தது. இதில் திருநங்கைள் என்று சொல்லப்பட்டு வரும் மூன்றாம் பாலினத்தவர் மற்றவர்களைக் காட்டிலும் எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை என்று பலவகையிலும் நிரூபித்து வரும் வேளையில் சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரம் என்பது கேள்விக்குறியாகத்தான் இருந்து வருகிறது.
அவர்களுக்கு வழங்கப் பட்டு வரும் அங்கீகாரத்தை அவர்கள் முழுமையாகப் பயன் படுத்திக் கொள்ளவில்லையா? அல்லது உண்மையிலேயே சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லையா என்பது வேறு. ஆனால் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையின் ஏற்பாட்டின்படி 3.6.2019 அன்று சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவ மனையில் மூன்றாம் பாலினத்தவருக்கான பன்னோக்கு மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்திருக்கிறார்.
அது பற்றி புதுக்கோட்டையில் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த பிஎஸ்சி படித்து விட்டு கால்நடைத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வரும் ஷிவானி நம்மிடம் பகிர்ந்து கொண்டபோது… சென்னையில் எங்களுக்கென்று இப்படி ஒரு பிரிவு துவங்கி இருப்பதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் தமிழக முதல்வருக்கும் எங்கள் அனைவரின் சார்பிலும் முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதிலும் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று அறிவித்திருப்பது என்னைப் போல தமிழகம் முழுவதும் அல்லாடிக் கொண்டிருக்கும் சுமார் 50-ஆயிரம் பேருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
அவ்வளவு பேரிலும் மூன்றாம் பாலினத்தவருக்கான நல வாரியத்தில் பதிவு செய்திருப்பவர்கள் கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் குறைவானவர்கள்தான். வெளியில் வருவதற்கே கூச்சப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் போல பட்டதாரியானவர்கள் மிகவும் குறைவுதான். அனைத்தையும் சகித்துக் கொண்டு சமூகத்தில் பணி செய்து வருவது மிகவும் சவாலான ஒரு விசயமாக இருக்கிறது.
மற்றவர்களுக்கெல்லாம் சிகிச்சை செய்வதைப் போல எங்களுக்கும் சிகிச்சைக்கென்று காய்ச்சல் தலைவலி என்று போனால்கூட தாமதம் ஆகத்தான் செய்கிறது. அதைத் தவிர்த்துக் கொள்ளவும் சிறப்பான மருத்துவம் செய்து கொள்வதற்காக தனியார் மருத்துவ மனைக்குத்தான் போக வேண்டியிருக்கிறது. அதற்காகும் செலவைப்பற்றி யோசிக்காமல் சென்றால்தான் மருத்துவ சேவையே கிடைத்து வருகிறது.
இதற்கு முன் பாண்டிச்சேரியில் இருக்கும் தனியார் மருத்துவ மனையான காந்தி மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் பாலினத்தவர் அனைவருக்கும் இலவச சிகிச்சைதான் செய்கிறார்கள். அது கடந்த பத்தாண்டுகளாக வாரம்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் செய்யப் படுகிறது. அந்த மருத்துவக் கல்லூரி தனியார் என்ற போதிலும் சாதாரண நோய்கள் முதல் பாலின மாற்று அறுவைச் சிகிச்சைவரை அனைத்துக்கும் இலவசம்தான். மற்ற தனியார் மருத்துவ மனைகளில் அனைத்துக்கும் கட்டணம்.
இப்போது சென்னையில் திறந்திருப்பதும் வாரத்தில் இரு நாட்கள் மருத்துவம் செய்ய வசதி செய்திருப்பதும் எங்களைப் பொறுத்த மட்டிலும் மகிழ்ச்சிதான். இதற்கு முன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்குச் சென்றுதான் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை கொண்டு வந்திருக்கிறோம். அவ்வாறு 500-பேருக்கும் மேல் செய்திருப்பார்கள். அதே நேரத்தில் அங்கு கிடைக்கும் மருத்துவ சேவையைவிட தனியார் மருத்துவ மனைகளில் காசு வாங்கிக்
இப்படியிருக்கும்போது வாரத்தில் வெள்ளிக்கிழமைகள் தோறும் என்பதை மாற்றி விட்டு நிரந்தரமாக ஒரு தலைமைச் செவிலியரை நியமித்து அனைத்து நாட்களும் மருத்துவம் செய்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் அனைத்து மாவட்ட மருத்துவக் கல்லூரிகளிலும் இதுபோல் மையங்கள் திறந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். ஹார்மோன்தெரபி செக்கப் முதல் அனைத்தையும் செய்ய முன்வர வேண்டும். எத்தனையோ தனியார் மருத்து மனைகளில் ஹார்மோன்தெரபி கொண்டு வந்தபோதும் அரசு மருத்துவ மனைகளுக்கு என்று இப்போதுதான் கொண்டு வரப் பட்டுள்ளது. அதே போல் நாளமில்லா சுரப்பி மருத்துவமும் அரசு மருத்துவ மனைகளுக்குக் கொண்டு வரவேண்டும். அரசு மருத்துவ மனைகளுக்கு இதுவரை கொண்டுவரப் படாமல் இருக்கும் நிலையை மாற்ற வேண்டும்.
இதை நாங்கள் கோரிக்கையாகவே கேட்பதற்குக் காரணமே மூன்றாம் பாலினத்தவர் ஆவதற்கு முன்னதாக பெரும்பாலும் பெண்ணாக இருந்து வந்ததால் அவர்கள் பெண் என்றுதான் பாலினச் சான்று பெற்று வைத்திருப்பார்கள். அதனால் அரசுப் பதிவேடுகள் உள்ளிட்;;;ட அனைத்திலும் பெண் என்றே பதிவாகி இருக்கும். இப்போது மூன்றாம் பாலினத்தவராக சான்றிதழ் பெறுவதற்குக்கூட கூச்சப் பட்டு வெளியில் சொல்ல முடியாமல் தவிப்பவர்கள் அதிகம். அவர்களுக்கு உரிய மருத்துவ வசதியோ சிகிச்சைகளோ பெற்றுக் கொள்வதில் உள்ள பல சிக்கல்களையும் களையும் விதமாக இதன் மூலம் சேவையாற்ற முடியும். அனைத்துக்கும் சென்னைக்குச் செல்ல வேண்டும் என்று இருக்கக் கூடாது.
இப்போது மட்டுமல்ல இதற்கு முன்பும்கூட எந்த ஒரு மாவட்டத் தலைமை மருத்துவ மனைகளிலும் எங்களைப் பொறுத்த மட்டிலும் ஏதும் சட்டப் பிரச்சினை வந்து விடக் கூடாது என்பதற்காகவே முறையான சிகிச்சைகள் செய்து விடுகிறார்கள். ஆனால் கிராமப் புறங்களில் உள்ள மருத்துவ மனைகளில் அப்படியிருக்கும் என்று சொல்ல முடியாது.
அதில் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் எச்.ஐ.வி, பாலிவினைத் தொற்று நோய்களுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்கு 100-சதவீதமும் பயனுள்ளதாக இருக்கிறது. அதற்குக் காரணம் நேரடி மருத்துவமாக இருந்தாலும் தொண்டு நிறுவனங்கள் மூலம் செல்பவர்களாக இருந்தாலும் கண்காணிப்புக்கு உள்ளாகி இருக்கும் என்பதால் முறையான சிகிச்சைகள் கிடைத்து வருகிறது.
பொதுவாகவே சென்னையில் ஏற்படுத்தப் பட்டிருக்கும் இந்த வசதி அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் ஏற்படுத்தப்பட வேண்டும். வாரம் ஒருநாள்தான் என்றாலும் அறுவைச்சிகிச்சை, நாளமில்லாச் சுரப்பி செக்கப், சிகிச்சை, ஆலோசனை அன் வாண்டடு என்று சொல்லப்படும் முகத்தில் முடி முளைப்பதை லேசர் சிகிச்சை மூலம் அகற்றப்படும் சிகிச்சையும் இலவசமாக ஏற்படுத்தப்பட வேண்டும். (இந்த லேசர் சிகிச்சைக்கு ரூபாய் 2,500-முதல் ஐந்தாயிரம்வரை தனியார் மருத்துவ மனைகளில் பெறுகிறார்கள்) இதையெல்லாம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் புதுக்கோட்டைக்காரர் என்பதால் புதுக்கோட்டை மாவட்ட திருநங்கைகள் சார்பில் கோரிக்கையாகவே வைக்கிறோம். புதுக்கோட்டை மாவட்டத் திருநங்கைகள் யாரும் பாலியல் தொழிலுக்குச் செல்வதில்லை என்பதை உறுதிமொழியாக எங்கள் மாவட்டத் தலைவி அசினா நாயக் எடுத்துக் கொண்டதோடு அதைச் செயல் படுத்தியும் வருகிறோம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment