Wednesday, June 19, 2019
புதுக்கோட்டை அருகே தண்ணீர் குடிக்க வந்த மான் நாய் கடித்து சாவு.
புதுக்கோட்டை ஜூன் 20.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்திற்கும் வம்பன் நால் ரோடு பகுதிக்கும் இடையில் தோட்டப் பகுதிக்கு தண்ணீர் குடிக்க வந்த மான் நாய் கடித்து இறந்து விட்டது.
மேற்காணும் பகுதியில் திருவரங்குளம் மற்றும் வம்பன் ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வம்பன் வேளாண் ஆராய்ச்சி மையம், வம்பன் தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம் மற்றும் வல்லத்திராகோட்டை மகாத்மா காந்தி பழப்பண்ணை ஆகியன அமைந்துள்ளன. இந்தப் பகுதி 1338-ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இதில் பெரும்பாலும் வேளாண் சார்ந்த பகுதியாக இருந்தபோதிலும் இந்தப் பகுதிகளைச் சுற்றிலும் முந்திரிக்காடு, தைலமரக்காடு உள்ளிட்ட வனப்பகுதியும் உள்ளன.
இந்த வனப்பகுதியில் மான்கள் நடமாட்டம் இருப்பதை அடிக்கடி மக்கள் பார்த்து வருகிறார்கள். எப்போதாவது வெளியில் வரும். மக்களைக் கண்டால் ஓடிவிடும். இந்நிலையில் நேற்று காலை சுமார் ஒன்பது மணியளவில் வம்பன் பகுதியை ஒட்டியுள்ள தோட்டப் பகுதிக்கு மான் ஒன்று தண்ணீர் குடிக்க வந்த போது நாய்கள் விரட்டிக் கடிபட்டு மான் இறந்து விட்டது.
அது குறித்து வனக்காவலர்களுக்குக் கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி எடுத்து வந்து இறந்து கிடந்த மானை அதில் ஏற்றிச் சென்று விட்டனர்.
இது குறித்து திருவரங்குளம் திருவள்ளுவர் நற்பணி மன்றத் தலைவர் பாலசுப்பிரமணியன் கூறுகையில் ஒரு காலத்தில் இந்த வனப்பகுதி அனைத்து மிருகங்களும் வாழ்ந்து வந்த இயற்கை சூழ்ந்த பெரும் காட்டுப் பகுதியாக இருந்தது. அதனால் மான்கள் சர்வ சாதாரணமாக வந்து நடமாடும். காமராஜர் ஆட்சிக்காலத்தில் இந்தப் பண்ணை வேளாண்மையின் வளர்ச்சிக்குப் பாடு பட்டபோதிலும் மான்கள் போன்றவற்றைப் பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
வனப்பகுதியின் உள்ளே புலிக்குளம் என்றொரு குளம் உள்ளது. இது உள்ளே இருப்பதால் இந்தக் குளத்தில் நீர் இருக்கும்போது வன விலங்குகள் அதிலிருந்து நீர் அருந்தி உயிர் வாழும். வுறட்சிக் காலத்தில் குடிதண்ணீருக்காக வெளியில் வருவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
இது குறித்து திருவள்ளுவர் நற்பணி மன்றத்தின் சார்பில் ஏற்கனவே வனத்துறைக்குக் கோரிக்கைகள் வைத்ததால் கடந்த ஆண்டு டிராக்டரில் ஒரு டேங்க் தண்ணீர் கொண்டு போய் புலிக்குளத்தில் விட்டார்கள். பிற்பாடு மழை வந்தபோது வழக்கம்போல் விலங்குகளுக்குத் தேவையான தண்ணீர் கிடைத்து வந்தது.
இப்போதும் அதுபோல் வைத்து விட்டால் போதும். இல்லையேல் தண்ணீர் தேடி வரும் மான்களை நாய்கள் மட்டுமல்ல சில மனிதர்களாலும் வேட்டையாடப் பட்டு விடும். அதற்கு வனத்துறை மட்டும்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. மேற்காணும் பகுதிகளில் உள்ள பண்ணைகளில் பத்துக்கும் மேற்பட்ட ராட்சச ஆழ்குழாய்க் கிணறுகள் உள்ளன. அவற்றிலிருந்து புலிக்குளத்தில் தண்ணீர் கொண்டு விட்டாலே போதும். மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் பாதுகாக்கப்படும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment